AmalAutomation
English
நிலா நலம்Nila Nalam

நிலா நலம்

முன்னுரை

என் இளைய மகன் ஆல்வின் 2012 இல் பிறந்து கைக்குழந்தையாக இருந்த பொழுது அவன் என் மீசையை பிடித்து விளையாடுவான். அது முள் போன்று உறுதியாக இருக்கும். மீசை குத்துவது அவனுக்கு பிடிக்கும். அதை பிடித்த விளையாட்டாக அவன் விளையாடுவான். நான் 2014 இல் இந்தியா சென்ற பொழுது அங்கே அதிகமாக கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டதாலும் பல அலைச்சல்கள் மற்றும் மனச்சுமையாலும் எனது சர்க்கரையின் அளவு அதிகமானது. வெறும் வயிற்றில் காலையில் அதன் அளவு 250க்கு மேல் இருக்கும். 40 நாள் கழித்து நான் அமெரிக்கா திரும்பும் சில நாட்களுக்கு முன்பு என் மீசையில் இடது பக்கத்தின் நடுவில் ஒரு சில முடிகள் பழுப்பு நிறமாக மாறியது. நான் வந்து ஒரு வாரத்தில் அது அடுத்த பக்கமும் பரவியது. இரண்டு பக்கமும் ஒரு சில முடிகள் ஒரு மாதத்தில் விழத் தொடங்கியது. அது தொடர்ந்து அடுத்த இரண்டு மாதத்தில் முழு மீசையில் இருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்தது.

தாடியின் முடியும் உதிர்ந்தது. முகத்தில் தோல் சிறிது தடித்து முகம் விகாரமாக மாறியது. தலையிலும் சில வட்டங்களாக முடிகள் உதிர ஆரம்பித்தது. அது மெல்ல மெல்ல பரவிக்கொண்டிருந்தது. இதனால் நான் என் மருத்துவரிடம் சென்று காண்பித்த பொழுது அவர் தோல் மருத்துவரிடம் சென்று காண்பிக்க சொன்னார். நான் தோல் மருத்துவரிடம் சென்று பார்த்த பொழுது அவர் மாத்திரைகளும் ஒரு ஸ்டெராய்டு ஊசியையும் போட்டார். முடிகள் உதிர்ந்த இடத்தில் மீசையில் மட்டும் ஐந்தாறு இடத்தில் ஊசி போட்டார். அதுபோல் தாடியிலும் தலையிலும் எங்கெல்லாம் முடி இல்லாமல் இருந்ததோ அங்கெல்லாம் ஊசி போட்டார். உணர்வு மிக்க மீசை பகுதியில் ஊசி போட்டுக்கொள்வது என்பது மிக வலிமிக்க செயல் ஆகும். ஒரு மாதத்திற்கு பிறகு முடி முளைத்தது. பாதி முடி முளைத்த பிறகு அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைத்தும் மீண்டும் உதிர்ந்தது. ஆனால் போட்டுக் கொண்ட ஊசியும் மாத்திரைகளும் எனது இரத்தத்தின் சர்க்கரை அளவை மிக அதிகமாக உயர்த்தியது.

நான் என் மருத்துவரிடம் சென்று காண்பித்த பொழுது அவர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள சொன்னார். ஆனால் அதற்கு பதிலாக சில கூடுதலான மாத்திரைகளைக் கொடுத்தார். அது மிகவும் விலை அதிகமானது. அதை உண்டு சர்க்கரையின் அளவு ஓரளவு கட்டுப்பட்டது. ஆனால் தோலுக்கான மாத்திரை சாப்பிட்டதால் மீண்டும் அதிகமானது. ஆனால் முடி முளைக்கவில்லை. அடுத்த வருடம் 2015ல் இந்தியா சென்ற பொழுது அங்குள்ள தோல் மருத்துவரை சென்று பார்த்தேன். அவரும் இங்கு உள்ள மருத்துவ முறையை போன்று ஊசிகளையும் மாத்திரைகளையும் கூடுதலாக சில களிம்புகளையும் கொடுத்தார். அதை பயன்படுத்திய பொழுது அதேபோல ஒரு மாதத்தில் முடி முளைத்தது பிறகு உதிர்ந்தது. இப்படியாக எனக்கு இரண்டு வருடம் கழிந்தது. இதற்குள் நான் கொஞ்சம் கொஞ்சமாக எனது உடல் நிலையை கவனிக்க ஆரம்பித்து அதைப்பற்றி படிக்க ஆரம்பித்தேன். இது உடலில் ஏற்படும் ஒருவித ஒவ்வாமையால் உருவாகிறது என்பதை அறிந்தேன்.

சில சமயம் நம் உடலில் அதிகமான சர்க்கரையாலோ கொழுப்புகளாலோ அல்லது இரத்த அழுத்தத்தாலோ அல்லது மன சுமையாலோ நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகள் நம் உடலில் உள்ள செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. இதனால் நம் உடலில் உள்ள எந்த ஒரு உறுப்பும் பாதிக்கப்படலாம். அவ்வாறு என் முகத்தில் ஏற்பட்ட பாதிப்புதான் என் மீசைக்கும் தாடிக்கும் ஏற்பட்ட இழப்பு என்பதை அறிந்தேன். முதல் வேலையாக என் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு குறைத்தேன். உடற்பயிற்சியாலும் உணவு கட்டுப்பாட்டாலும் வேகமாக என் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து ஓரளவுக்கு சராசரி அளவுக்கு வந்தது. இப்பொழுது என் முகத்தில் மீண்டும் முடி முளைக்க ஆரம்பித்ததை கவனித்தேன். அதை தொடர்ந்து நான் மேலும் முயற்சி செய்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தேன் இதனால் என் முகத்தின் உள்ள வீக்கங்கள் குறைந்து முடிகள் முளைக்க ஆரம்பித்தது.

மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. தலையில் உள்ள வட்ட தழும்புகளும் மறைந்து மீண்டும் முடி முளைக்க ஆரம்பித்து இருந்தது. அப்பொழுதுதான் நான் தெரிந்து கொண்டேன் நமது கட்டுப்பாடற்ற உணவாலும் மனச்சுமையாலும் நாம் உறக்கத்தை இழக்கிறோம். அதனால் இரத்தம் சுத்தம் ஆவதற்கு பதிலாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கொழுப்பின் அளவு உயர்ந்து இரத்த அழுத்தத்தை உண்டாக்கி நம் உடலில் பல மாற்றங்களை உருவாக்குகிறது. மேலும் இது போன்ற ஒவ்வாமைகளை உருவாக்கி எந்த விதமான நோய்களையும் உருவாக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். என் குடும்ப மருத்துவருக்கும் தோல் மருத்துவருக்கும் எனது உடல்நிலை நன்றாக தெரியும். இருந்தும் அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் தோல் மருத்துவர் என் முடி முளைப்பதற்காக மருந்தை கொடுத்தார். ஆனால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்தும் என்பதை அவர் சொல்லவில்லை. அது தெரியாமல் என் குடும்ப மருத்துவர் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதற்கு மருந்தை கொடுத்தார்.

இதனால் எனது பணிச்சுமையாலும் இந்த மருந்துக்களாலும் என் உடல் மேலும் பலவீனமடைந்தது. இதனால் முடி முளைப்பதற்கு பதிலாக உதிர ஆரம்பித்திருந்தது. இதுதான் நடந்தது. இதை நான் புரிந்து கொண்டதனால் முடி முளைப்பதற்காக இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து எனது பணிச்சுமையையும் ஓரளவு குறைத்து என் உடல் நிலையை சரி செய்து கொண்டேன்.

இன்னொரு நிகழ்வு. எனது இளைய மகன் ஆல்வின் நாங்கள் புது வீட்டிற்கு குடிவந்த பொழுது அவனுக்கு காலில் நிறைய கொப்புளங்கள் உருவாகி ஒரு சில நாளில் அவைகள் வெடித்து நிறைய புண்கள் ஆகிவிடும். அதற்கான காரணங்கள் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தைகள் மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். அவர் அவனை தோல் மருத்துவரிடம் சென்று காண்பிக்க சொன்னார். நாங்களும் அவரிடம் சென்று காண்பித்தோம். அவர்களுக்கும் அது புரியவில்லை. ஒருவேளை அது விஷச்செடியின் இலைகள் பட்டு ஒவ்வாமையினால் ஏற்பட்டிருக்கும் என்று சில மருந்துகளையும் களிம்புகளையும் கொடுத்தார். நாங்கள் அதனை பயன்படுத்தினால் அது ஆறிவிடும். ஆனால் ஒரு சில நாட்களில் மீண்டும் அது போல் நிறைய புண்கள் ஏற்பட்டு விடும். இப்படியாக ஒரு ஆறு மாதம் சென்றது.

பிறகுதான் எங்களுக்கு தெரிய வந்தது எங்கள் கொல்லை புறத்தில் உள்ள நெருப்பெரும்புகள் ஒன்று கடித்தால் கூட அவனுக்கு அதிலிருந்து கொப்புளங்கள் உருவாகின்றன என்று. ஒரு கொப்புளத்தில் இருந்து நிறைய கொப்புளங்கள் உருவாகின்றன என்பதை அறிந்தோம். அதனால் அந்த நெருப்பு எறும்பு புற்றுக்களை அழித்து கொல்லையில் எறும்புகள் இல்லாமல் பார்த்துக் கொண்டோம். இப்பொழுது அவனுக்கு அந்த பிரச்சினை தீர்ந்தது. ஆனால் இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது எவ்வளவு அனுபவமிக்க மருத்துவர்களாலும் சில எளிய பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை. என் அப்பாவிடம் பேசும்பொழுதுதான் இது பூச்சிக்கிடியாக இருக்கலாம் என்று அவர் சொன்னதிலிருந்து இந்த எறும்பு கடியை நாங்கள் தெரிந்து கொண்டோம்.

இந்த நிகழ்வுகளில் இருந்து என் உடலையும் எனது உணவு முறையையும் உடற்பயிற்சியையும் பணி சுமைகளையும் கவனிக்க ஆரம்பித்தேன். அப்பொழுதுதான் எனக்கு பல உணவு முறைகள் தெரிய வந்தது. ஒவ்வொரு உணவு முறையிலும் ஒரு சில குறைபாடுகள் இருப்பதையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

கொரோனாவிற்கு பிறகு 2022-ல் நான் ஒரு உணவு முறையை பின்பற்றினேன். பெங்களூரில் இருந்து திருமதி கிருத்திகா என்பவர் எனக்கு அந்த உணவு முறையை பற்றி பயிற்சி கொடுத்தார். மூன்று மாத பயிற்சியான அதிலிருந்து நான் சில உணவு முறைகளை தெரிந்து கொண்டேன். பச்சை காய்கறிகள், கீரைகள், மூலிகைகளை கொண்டு சில வகையான உணவுகள் மற்றும் பசும் மஞ்சள், ஆப்பிள் செடார் போன்றவைகளை நம் உணவில் சேர்க்கும் பொழுது அவை ஏற்படுத்தும் விளைவுகளையும் அறிய வந்தேன். மேலும் அவர் சொல்லிக் கொடுத்த ரிலாக்சேஷன், ஆஃபர்மேஷன், கிராட்டிடியூட் டெக்னிக் போன்றவைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 2023 இல் நான் யோகா டயட் என்ற ஒரு முறையை மருத்துவர் ரமேஷ் ரங்கராஜன் என்பவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொண்ட உணவு முறை. உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறையை அவர் சொல்லிக் கொடுத்தார். இந்த உணவு முறையின் மூலம் உடலை சுத்திகரிக்கவும் அவர் கற்றுக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்தது மிகவும் ஒரு எளிய விசயம். நம் உட்கொள்ளும் உணவின் கலோரியை குறைப்பதன் மூலம் அதுவும் உடல் சோர்வு இல்லாமல் கலோரியை குறைக்கும் முறையை தெரிந்து கொண்டால் நம் உடலில் எடையை குறைத்து உடலை சுத்தப்படுத்தலாம் என்பதை சொல்லிக் கொடுத்தார்.

என் அண்ணன் 2021 இல் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்தார். என் அப்பா 2024 இல் புற்றுநோயினால் இறந்தார். இவர்களின் திடீர் மரணம் ஏற்படுத்திய பாதிப்பு உடல்நிலை பற்றி மேலும் படிக்க தோன்றியது. இதனால் நான் பல புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். அதில் மருத்துவர் ஹெக்டே அவர்கள் ஒரு காணொளியில் சொல்லிய புத்தகம் Timeless Secrets of Health and Rejuvenation by Andreas Moritz என் மருத்துவ அறிவை மேலும் அதிகரித்தது. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த புத்தகம் என் உடலைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள உதவியது.

2015ல் என் அலுவலகத்தில் நாங்கள் உருவாக்க ஆரம்பித்திருந்த ஒரு ப்ராஜெக்ட் அதற்கு முன்பு மூன்று பெரிய கம்பெனிகள் 25 வருடங்களாக முயன்றும் முடியாததை நாங்கள் அடுத்த மூன்று வருடத்தில் வெற்றிகரமாக செய்து முடித்து 2018ல் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் எங்கள் தென்கரோலினா மாநிலத்தில் பல லட்சம் குழந்தைகள் பயன்பெற்றார்கள். பெரிய கம்பெனிகளால் முடியாததை நாங்கள் செய்து முடித்ததற்கு முக்கிய காரணம் அது அஜைல் டெவலப்மெண்ட் எனப்படும் பகுதி பகுதியாக வேலைகளை சுழற்சி முறையில் செய்து முடிக்கும் முறையால் நாங்கள் செய்து முடித்தது தான். இதற்கு முன்பு முயற்சி செய்த கம்பெனிகள் அவ்வாறு செய்யவில்லை. அதுதான் அவர்களின் தோல்விக்கு காரணம். இதனால் எங்களுக்கு அரசிடம் இருந்து பெரிய பாராட்டுக்கள் வந்து சேர்ந்தது. இந்த அனுபவம் என்னை நம் உடல் நலத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

நோய்களும் அதன் அனுபவங்களும் நான் கற்றுக் கொண்ட வெவ்வேறு உணவு முறைகளும் நான் படித்த ஆயுர்வேதம் மற்றும் சித்தா நூல்களும் என் அலுவலகத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தையும் கொண்டு நான் உருவாக்கிய இந்த உடல் நலம் பற்றிய முறைதான் நிலா நலம். இதை நான் தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக எனக்கு நானே சோதனை செய்து கொண்டு வருகிறேன். எனக்கும் என் மனைவிக்கும் நல்ல பலனை இது கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் பயனை எல்லோரும் பெற இதை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறேன். இதனை நீங்களும் படித்துணர்ந்து பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த முறையை பயன்படுத்தும் முன் உங்கள் குடும்ப மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். என்னோடு சக சோதனை எலியாக கடந்த நான்கு வருடங்கள் இந்த வாழ்வு முறைகளை பயிற்சி செய்த என் மனைவி ஜாக்குலின் இன் உதவி மிகப்பெரியது.

என் வாழ்க்கையின் உடல்நல வழிகாட்டிகள்

ஆகியோருக்கு இந்த புத்தகத்தை

சமர்ப்பிக்கிறேன்.

காந்தி பிறந்த

இந்த நன்னாளில்

இந்த நூலை வெளியிடுவதில்

மகிழ்ச்சி அடைகிறேன்.

அமலோற்பவநாதன் யாகுலசாமி

amal_forum at hotmail.com 

02 October 2026

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

- திருக்குறள் - 423

பொருள்: யார் எதைச் சொன்னாலும், அதன் உண்மையை சிந்தித்து அறிய வேண்டும்.