இந்நூலில் சொல்லப்பட்ட எதுவும் என் கண்டுபிடிப்பு அல்ல. என் பெற்றோரிடமிருந்தும், சில நூல்களிலிருந்தும், சில ஆசிரியர்களிடமிருந்தும் கற்றுக்கொண்டவற்றைத் தொகுத்து, என் உடலில் சோதித்துப் பார்த்ததே இது. அவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில், அவர்கள் சொன்னவற்றின் சாரத்தை இங்கே தொகுத்திருக்கிறேன்.
ஒவ்வொருவரைப் பற்றிய குறிப்பின் முடிவிலும் "நிலா நலத்தில் இது எங்கே" என்ற பகுதி இருக்கிறது. அவர்களிடமிருந்து நான் எதை எடுத்தேன், அது இந்நூலின் எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதை அது சொல்கிறது. கடன் வாங்கியதை ஒப்புக்கொள்வது நேர்மை மட்டுமல்ல; அது வாசகருக்கு மூலத்தைத் தேடிச் செல்லும் வழியையும் காட்டுகிறது.
சுருக்கமாக
| யார் | நிலா நலம் எடுத்துக்கொண்டது |
|---|---|
| காந்தி | ஐம்பூத மருத்துவம்; மூக்குச் சுத்திகரிப்பு; ஒழுங்கான வாழ்க்கையின் மேன்மை. |
| கார்வர் | சுழற்சி என்ற கருத்து; மண்ணின் நலமே உடலின் நலம்; உள்ளூர் உணவு. |
| நம்மாழ்வார் | நோய் என்பது உடலின் சுத்திகரிப்பு; ஓய்வு கொடுத்தால் உடல் தன்னைச் சரிசெய்யும். |
| ஜெயமோகன் | அவதானித்துப் பதிவு செய்தல், மாக்ரோபயாட்டிக்ஸ் விதிகள். |
| கிருஷ்ணமாச்சாரி | ஆசனமும் மூச்சும் தியானமும் ஒரே பயிற்சியின் மூன்று படிகள்; வாரம் ஒருநாள் தொடர்ச்சி. |
| சுந்தர் பாலசுப்ரமணியன் | மூச்சுப் பயிற்சி முழுவதும்; பட்டினி–உணவு சுழற்சியின் உயிரியல். |
| மார்க் ஹைமன் | எதைத் தவிர்ப்பது; அளவுகள்; எதை அளப்பது; கூட்டு முயற்சியின் அவசியம். |
| பி. எம். ஹெக்டே | மனமே உடலின் சூழல்; மௌன விரதம்; குற்ற உணர்வு ஓர் அழற்சி. |
| ஸ்காட் ஜான்சன் | சுழற்சி முறை முழுவதும்; தோல்வியின் விலையைக் குறைத்தல். |
| கிருத்திகா தரன் | வயதுக்கேற்ற உடலுக்கேற்றத் திட்டம்; சமையலறையின் முக்கியத்துவம். |
| ரமேஷ் ரங்கராஜன் | சூரிய நமஸ்காரம்; உடலுக்கேற்ப பயிற்சி; மருந்தில்லாத வாழ்வு. |
| ஆண்ட்ரியாஸ் மோரிட்ஸ் | நாள் தாளமும் நிலவுச் சுழற்சியும்; உணவின் வரிசை; நீர் அருந்தும் முறை. |
1. திரு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி — "Key to Health" (உடல்நலத்தின் திறவுகோல்)
காந்தியடிகள் 1942–44 இல் ஆகா கான் அரண்மனைச் சிறையில் இருந்தபோது எழுதிய நூல் இது. குஜராத்தியில் எழுதப்பட்டு, டாக்டர் சுசீலா நய்யார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1948 இல் வெளிவந்தது. "நோயில்லாமல் இருப்பதும், களைப்பின்றி நாளொன்றுக்குப் பத்து மைல் நடக்கவும், சாதாரண உடலுழைப்பைச் செய்யவும், எளிய உணவைச் செரிக்கவும் முடிவதுதான் நலம்" என்று அவர் நலத்தை வரையறுக்கிறார்.
உடல் நிலம், நீர், ஆகாயம், ஒளி, காற்று ஆகிய ஐம்பூதங்களால் ஆனது என்பதால், நோய்க்கான மருத்துவமும் அந்த ஐந்திலேயே இருக்கிறது என்பது அவர் கொள்கை. மண் ஒத்தடம் தலைவலியையும் கொதிப்பையும் கட்டியையும் தணிக்கிறது; குனேயின் இடுப்புக் குளியல் செரிமானத்தைச் சீர்செய்கிறது; வெயில் குளியலும் திறந்தவெளித் தூக்கமும் இரத்தத்தைச் சுத்தம் செய்கின்றன.
காற்றைப் பற்றிய அத்தியாயத்தில், வாய் வழியாக அல்ல மூக்கு வழியாகவே மூச்சு விட வேண்டும் என்றும், நாள்தோறும் வாயைச் சுத்தம் செய்வதுபோல் மூக்கையும் நீரால் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார் — இந்நூலின் ENT சுத்திகரிப்புக்கு இது நேரடி முன்னோடி.
செரிமானக் கோளாறும் மலச்சிக்கலும்தான் எண்ணற்ற நோய்களின் வேர் என்பது அவர் அழுத்தமான கருத்து. மசாலா, தேநீர், காபி, போதைப்பொருள் ஆகியவற்றை விலக்கி, சமைக்கப்படாத அல்லது குறைவாகச் சமைத்த தானியம், காய், கனி, கொட்டைகளை உண்ணச் சொல்கிறார். "நல்ல ஒழுங்கான வாழ்க்கை, சிக்கலான ஆசனங்களைவிட மேலானது" என்ற அவர் வாக்கே இந்நூலின் அடித்தளம்.
விரதத்தைக் காந்தி அரசியல் ஆயுதமாக மட்டும் பயன்படுத்தவில்லை; அதை உடல் சுத்திகரிப்பு முறையாகவும் கண்டார். ஆனால் அவரே ஓர் எச்சரிக்கையும் விடுக்கிறார் — விரதம் மனத்தின் ஒழுக்கத்தோடு சேர்ந்திருக்க வேண்டும்; இல்லையேல் அது வெறும் பட்டினி.
நிலா நலத்தில் இது எங்கே
- அத்தியாயம் 7 இன் "மண், நீர், ஒளி, காற்று" பகுதி முழுவதும் அவருடையது — மண் ஒத்தடம், இடுப்புக் குளியல், வெயில், காற்றோட்டம்.
- அத்தியாயம் 6 இன் முறை 17 (ENT சுத்திகரிப்பு) அவரது மூக்குச் சுத்திகரிப்பு அறிவுரையின் தமிழ் வடிவம்.
- அத்தியாயம் 5 இன் "ஏழு பழக்கங்கள்" பகுதியின் தலைப்பு வாக்கியமே அவருடையது — ஒழுங்கான வாழ்க்கை, சிக்கலான பயிற்சியைவிட மேலானது.
- அமாவாசை உலர் விரதத்தோடு மௌன விரதமும் சேர்த்திருப்பதற்குக் காரணம் அவரது எச்சரிக்கைதான் — விரதம் உடலுக்கு மட்டும் அல்ல, மனத்திற்கும்.
2. டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் – நிலக்கடலை மனிதன், அமெரிக்கத் தாவரவியல் அறிவியலாளர், கல்வியாளர்
அடிமையாகப் பிறந்து, அமெரிக்காவின் மிகச் சிறந்த வேளாண் அறிவியலாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் (சுமார் 1864 – ஜனவரி 5, 1943). மிசௌரி மாநிலத்தின் டயமண்ட் என்ற ஊரில் பிறந்து, டஸ்கீஜி நிறுவனத்தில் நாற்பத்தேழு ஆண்டுகள் கற்பித்தவர்.
தொடர்ந்து பருத்தி மட்டுமே பயிரிட்டதால் அமெரிக்க தென் மாநிலங்களின் மண் தழைச்சத்து இழந்து தரிசானது. அதற்கு அவர் தந்த தீர்வு பயிர்ச் சுழற்சி — பருத்திக்கு இடையே நிலக்கடலை, சோயா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றைப் பயிரிடுவது. இவை மண்ணுக்குத் தழைச்சத்தைத் திரும்பத் தருவதோடு, மனிதனுக்கு உணவாகவும் ஆயின.
ஏழை விவசாயிகள் தன்னிறைவு பெற வேண்டும் என்பதே அவர் இலக்கு. நாற்பது ஆண்டுகளில் 44 நடைமுறைக் கையேடுகளை வெளியிட்டார். அவற்றுள் மிகப் புகழ்பெற்றது "How to Grow the Peanut and 105 Ways of Preparing it for Human Consumption" (1916). சர்க்கரைவள்ளிக் கிழங்கு குறித்து ஆறு கையேடுகள் எழுதினார்.
1921 இல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிலக்கடலை ஆய்வுகளை முன்வைத்தார். 1923 இல் ஸ்பிங்கார்ன் பதக்கம் பெற்றார்; 1941 இல் டைம் இதழ் அவரை "கறுப்பு லியனார்டோ" என்று அழைத்தது.
அவர் நமக்குத் தரும் பாடம் இதுதான்: மண்ணை வறியதாக்கும் பயிர் முறை, மனிதனையும் வறியவனாக்கும். மண்ணின் நலனும், உள்ளூர் உணவும், பலவகைப் பயிர்களும் ஒன்றுசேர்ந்ததே உண்மையான உணவுப் பாதுகாப்பு.
இவர் மற்றும் இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) ஆகிய இருவருக்கும் இடையே நேரடி சந்திப்பு எதுவும் நிகழவில்லை என்றாலும், கடிதப் போக்குவரத்து மூலமாக ஆழமான பரஸ்பர நட்பும், அறிவுப்பூர்வமான தொடர்பும் இருந்தது.
1929 முதல் 1935 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தங்களுக்குள் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டனர். இவர்களின் இந்த உறவின் மூலம் ஆரோக்கியம் மற்றும் உணவுமுறை ஆலோசனைகளைப் பரிமாறிக்கொண்டனர்.
காந்திஜி அவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட உண்ணாநோன்பு போராட்டங்கள் காரணமாக, கடுமையான இரத்தசோகையினாலும் உடல்நலக் குறைவினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
காந்தியின் நெருங்கிய நண்பரான சார்லி ஆண்ட்ரூஸ் மூலமாக இந்தத் தொடர்பு உருவானது.
காந்தியின் உடல்நிலையை மேம்படுத்தவும், அவர் சைவ/முழுத்தாவர உணவு முறையைப் (Vegan diet) பின்பற்றி எப்படி ஆரோக்கியமாக வாழ்வது என்பதற்கும் டாக்டர் கார்வர் பல ஆலோசனைகளை வழங்கினார்.
சோயாபீன்ஸ், வேர்க்கடலை மற்றும் உள்ளூர் தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சத்தான உணவுப் பட்டியலை காந்திக்காக கார்வர் வடிவமைத்துக் கொடுத்தார்.
காந்தியின் மூலமாக டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரை எனக்கு தெரிய வந்தது. அந்த நிலக்கடலை மனிதனால் கடலையின் அனைத்து நன்மைகளும் குறிப்பாக அதன் குறைந்த விலை, அதிக பலவிதமான சத்துக்கள் மற்றும் விரைவான நீடித்த ஆற்றல் ஆகியவற்றை தெரிந்து கொண்டேன். அதனால் என் அலுவலக மேசையில் எனது குழுவிற்காக வாங்கி எப்பொழுதும் வைத்திருப்பேன்.
நிலா நலத்தில் இது எங்கே
- "பயிர்ச் சுழற்சி" என்ற அவரது கருத்தே இந்நூலின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சிந்தனை. ஒரே பயிரைத் தொடர்ந்து விளைவித்தால் மண் சோர்கிறது; ஒரே உணவை, ஒரே அளவில், ஒரே தாளத்தில் தொடர்ந்து உண்டால் உடலும் சோர்கிறது. சுழற்சியே மீட்பு.
- அத்தியாயம் 7 இன் "ஒரே உணவைத் தொடர்ந்து உண்ணக் கூடாது" என்ற விதி இங்கிருந்து வந்தது.
- அத்தியாயம் 4 இல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு காயும் சாறும் இருப்பதற்குக் காரணம் இதுதான் — பீட்ரூட், பூசணி, சுரை, நெல்லி, வெற்றிலை, இளநீர் என்று சுழற்சி. இந்த உணவுகளின் குணமும் வேறுவேறு. நம் உடலில் வெவ்வேறு அளவில் அமில கார நிலைகளை மாற்றுகிறது. இதனால் உடலில் வெப்ப நிலை அல்லது நீரின் அளவு மாறுகிறது.
- நிலக்கடலையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் — உள்ளூரில், அந்தப் பருவத்தில், மலிவாகக் கிடைப்பதையே உண்ணுதல் — இந்நூலின் அத்தியாயம் 6 இல் ஒரு வெளிநாட்டுப் பொருள்கூட இல்லாததற்குக் காரணம். ஆனால் இவைகளுக்கு இணையான வெளிநாட்டுப் பொருள்களையும் பயன்படுத்தலாம்.
3. திரு. கோ. நம்மாழ்வார் — "நோயினைக் கொண்டாடுவோம்"
கோ. நம்மாழ்வார் (1938–2013) தமிழகத்தின் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர். வேளாண் அறிவியலாளராகப் பயின்று, முப்பதாண்டுகளுக்கும் மேலாக இரசாயன உரத்திற்கும் பூச்சிக்கொல்லிக்கும் எதிராகக் களத்தில் நின்றவர். "தாய் மண்", "உழவுக்கும் உண்டு வரலாறு", "நெல்லைக் காப்போம்" உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
"நோயினைக் கொண்டாடுவோம்" என்ற இந்நூலின் தலைப்பே அவரது பார்வையைச் சொல்லிவிடுகிறது. நோய் என்பது எதிரி அல்ல; அது உடல் தன்னைத்தானே சுத்தம் செய்யும் முயற்சி. காய்ச்சல், வாந்தி, பேதி, சளி — இவை நோய் அல்ல, நோய்க்கான உடலின் பதில். அவற்றை மருந்தால் அடக்குவது, குப்பையை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பது போலாகும்.
"பசி மூலமாக, தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக, இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல்" என்கிறார். எனவே நோய் வந்தபோது உடல் பசியை நிறுத்துகிறது என்றால், அது உண்ணாதே என்று சொல்கிறது; அப்போது கட்டாயமாக ஊட்டுவது தவறு.
மண்ணின் நலமும் மனிதனின் நலமும் ஒன்றே என்பது அவர் கூறிய மையக் கருத்து. மண்ணில் நுண்ணுயிர் இல்லாவிட்டால் தாவரத்தில் சத்து இல்லை; தாவரத்தில் சத்து இல்லாவிட்டால் உண்ணும் மனிதனுக்கு நோய். எனவே உடல்நலம் மருத்துவமனையில் தொடங்குவதில்லை — அது வயலில் தொடங்குகிறது.
நிலா நலத்தில் இது எங்கே
- இந்நூலின் மிக அடிப்படையான அனுமானம் அவருடையது: உடலுக்கு ஓய்வு கொடுத்தால் அது தன்னைத்தானே சரிசெய்யும். இருபத்தேழு முறைகளும் செய்வது ஒன்றே — வழியை விட்டு விலகுவது.
- அத்தியாயம் 6 இன் விரத முறைகள் (18, 19, 20) இந்தக் கருத்தின் நேரடி வடிவம். விரதம் என்பது உடலைத் தண்டிப்பது அல்ல; அதற்கு இடம் கொடுப்பது.
- சுழற்சியின் நடுவில் வரும் நாக்கு வெண்படலம், வாய் நாற்றம், லேசான தலைவலி — இவற்றை "பக்க விளைவு" என்று பார்க்காமல் "உடல் வேலை செய்கிறது" என்று பார்ப்பது அவர் கற்றுத் தந்த பார்வை (அத்தியாயம் 4 — எதிர்பார்க்கக்கூடிய மாற்றங்கள்).
- என் புதுக்குறள் 18 — "பூச்சிக்கொல்லி பூச்சியை மட்டுமல்ல நம் உடலிலுள்ள நுண்ணுயிரிகளையும் கொல்லும்" — முற்றிலும் அவருடைய கருத்து.
4. திரு. ஜெயமோகன் — "நலமறிதல்"
எழுத்தாளர் ஜெயமோகன் 2021 இல் எழுதிய "நலமறிதல்" ஒரு மருத்துவ நூல் அல்ல; தன் உடலை அவதானித்த ஒருவரின் குறிப்பேடு. "உடலை அவதானிக்க ஆரம்பித்தபின் நான் உணவை அவதானித்தேன்" என்று தொடங்கும் அவர், "மனித அறிவு மனித உடலுடன் கொள்ளும் உரையாடலின் விளைவே மருத்துவம்" என்கிறார்.
நவீன மருத்துவத்தை அவர் முற்றாக மறுக்கவில்லை. "அலோபதி சிகிச்சை, அலோபதி வணிகம் என இரண்டாகப் பிரித்துக் கொள்கிறேன்" என்கிறார். முதுமையின் துயரை நீக்கியதில் அலோபதி அடைந்த வெற்றியை வரமாகவே கருதுகிறார். ஆனால் ஒரு ஊழியர் முப்பதாண்டு சம்பாதித்ததை முழுவதுமாகக் கடைசி ஆண்டுகளில் மருத்துவமனைக்குக் கொடுத்துவிட்டு இறக்கும் நிலையைக் கடுமையாக விமர்சிக்கிறார்.
"அலோபதி உடலைப் பழுது பார்க்கிறது; ஆயுர்வேதம் உடலைத் தன் இயல்பான நிலைக்குக் கொண்டு செல்ல முயல்கிறது" — இந்த ஒரு வரியில் இரு மரபுகளின் வேறுபாட்டைச் சுருக்கிவிடுகிறார்.
இயற்கை உணவு குறித்த அனுபவத்தில், "சமைத்து உண்பது சாவை அழைப்பது" என்ற ராமகிருஷ்ணனின் கோட்பாட்டையும், மாக்ரோபயாட்டிக்ஸின் விதிகளையும் பதிவு செய்கிறார் — அந்த நிலத்தில், அந்தப் பருவத்தில் விளைவதையே உண்ணுதல்; குறைவாகச் சமைத்தல்; உப்பையும் இனிப்பையும் மிகக் குறைவாகப் பயன்படுத்துதல்; ஒரே உணவைத் தொடர்ந்து உண்ணாதிருத்தல்; உணவை அழகாகப் பரிமாறுதல். "நல்ல உணவு அமைதியை அளிக்கும், நல்ல சிந்தனைகளை அளிக்கும்" என்பது அவர் அனுபவம்.
அவரது மிக நேர்மையான ஒப்புதல் இது: "அதை என்னால் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. பயணங்கள் நிறைந்த வாழ்க்கை. அதைவிட நாக்கின் ஈர்ப்பு. ஆனால் கடைப்பிடித்தவரை அது பயனளித்திருக்கிறது."
நிலா நலத்தில் இது எங்கே
- அந்தக் கடைசி ஒப்புதல்தான் இந்நூலின் எட்டாம் அத்தியாயத்திற்கு வித்திட்டது. முழுமை சாத்தியமில்லை என்றால், முழுமையைக் கோராத ஒரு முறை வேண்டும். அதுவே சுழற்சி முறை — "கடைப்பிடித்தவரை பயனளித்தது" என்பதையே இலக்காக்குவது.
- அத்தியாயம் 7 இல் ஆயுர்வேதத்தையும் அலோபதியையும் எதிரிகளாக்காமல் பிரித்துப் பார்க்கும் அணுகுமுறை அவருடையது.
- அத்தியாயம் 7 இன் மாக்ரோபயாட்டிக்ஸ் ஐந்து விதிகள் அவர் நூலிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை.
- அத்தியாயம் 4 இல் "உங்கள் அனுபவத்தை எழுதி வையுங்கள்" என்ற அறிவுரை — நூல் முழுவதும் அவர் செய்தது அதுவே. வாதிடாமல், அவதானித்துப் பதிவு செய்தல்.
5. திரு. கிருஷ்ணமாச்சாரி — ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை
2001 இல் நான் சென்னையில் இருந்தபோது, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில், மெரினா கடற்கரையில் உள்ள ஐஸ்ஹௌஸில் கிருஷ்ணமாச்சாரி அவர்களிடம் யோகாவும் தியானமும் பிராணாயாமமும் கற்றுக்கொண்டேன். ஆறு மாதம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்.
அந்த ஆறு மாதத்தில் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் ஒரு நுட்பம் அல்ல, ஒரு வரிசை. ஆசனம் உடலைத் தயார்படுத்துகிறது; மூச்சு மனத்தை அமைதிப்படுத்துகிறது; தியானம் அந்த அமைதியில் நிற்கிறது. இந்த மூன்றையும் தனித்தனியாகப் பார்க்கக் கூடாது — அவை ஒரே பயிற்சியின் மூன்று படிகள். ஆசனம் இல்லாமல் அமர்ந்தால் உடல் வலிக்கும்; மூச்சு இல்லாமல் தியானித்தால் மனம் அலையும்.
இரண்டாவது பாடம் தொடர்ச்சியைப் பற்றியது. வாரம் ஒருநாள் மட்டுமே வகுப்பு. ஆனால் அந்த ஒருநாள் ஆறு மாதம் தவறவில்லை. நாள்தோறும் இரண்டு மணி நேரம் செய்து இரண்டு வாரத்தில் நிறுத்துவதை விட, வாரம் ஒருமுறை செய்து ஆறு மாதம் தொடர்வது பெரிய பலன் தரும். நான் கடந்த 25 வருடங்களாக அனேகமாக தினமும் பத்து நிமிடங்கள் செயது வருகிறேன்.
மூன்றாவது — அமைதியாக இருப்பதும் ஒரு பயிற்சி. மடத்தின் சூழலில், பேசாமல் அமர்ந்திருப்பது முதலில் மிகக் கடினமாக இருந்தது. அமாவாசை நாளின் மௌன விரதத்தை என்னால் செய்ய முடிகிறது என்றால், அதன் முதல் பயிற்சி அங்கே நடந்ததுதான்.
நிலா நலத்தில் இது எங்கே
- அத்தியாயம் 7 இன் "யோகாவும் மூச்சுப் பயிற்சியும்" பகுதியின் வரிசை — ஆசனம், பின் மூச்சு, முடிவில் சவாசனம் — அவர் கற்பித்த வரிசையே.
- அத்தியாயம் 6 இன் முறை 27 (WWYP) இல் யோகாவும் வழிபாடும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதற்குக் காரணம் அவர்.
- அத்தியாயம் 6 இன் முறை 20 — அமாவாசை மௌன விரதம்.
- அத்தியாயம் 8 இன் "தொடர்ச்சியே முழுமையைவிட முக்கியம்" என்ற கருத்து இங்கிருந்து வந்தது.
6. டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன் — "PranaScience: Decoding Yoga Breathing"
அமெரிக்காவின் தென் கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (MUSC) ஹாலிங்ஸ் புற்றுநோய் மையத்தில் பணியாற்றும் செல் உயிரியலாளர்; PranaScience Institute நிறுவனர். பிராணாயாமத்திற்கும் உமிழ்நீர் உயிரிக் குறிப்பான்களுக்கும் இடையிலான தொடர்பை முதன்முதலில் அறிவியல்பூர்வமாக நிறுவியவர்.
திருமூலரின் திருமந்திரத்தில் உள்ள 3000 பாடல்களில், பிராணாயாமம் பற்றிப் பேசும் பதினான்கு பாடல்களை (564–577) மட்டும் எடுத்து, அவற்றை நவீன உயிரியலோடு இணைத்து விளக்குகிறார் இந்நூல்.
நம் இயல்பான மூச்சு நிமிடத்திற்குச் சுமார் 15. வெறும் கவனத்தால் அதை 10 ஆகவும், பயிற்சியால் 7 ஆகவும் குறைக்க முடியும் — உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது பெரும் பயன். ஆயுள் முழுவதும் நமக்கு ஒதுக்கப்பட்ட மூச்சுகள் சுமார் 55 கோடி; வேகமாக மூச்சு விடுவது அந்தக் கணக்கை விரைவில் காலி செய்வது என்று ஒரு வங்கி உவமையால் விளக்குகிறார்.
மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவது (கும்பகம்) உடலில் சிறிதளவு கரியமில வாயுவை உயர்த்தி, நுண் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது; தலைமுடிக்கும் தோலுக்கும் இரத்த ஓட்டம் கூடுகிறது. நிணநீர் ஓட்டத்திற்கு இதயம் போன்ற ஒரு பம்பு இல்லை; உதரவிதானத்தின் அசைவே அதை நகர்த்துகிறது — எனவே கும்பகம் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் உதவுகிறது.
கலோரி கட்டுப்பாடு ஆயுளை நீட்டிக்கிறது என்பதை mTOR என்ற புரதப் பாதையின் மூலம் விளக்குகிறார். தொடர்ந்து உணவு உள்ளே சென்றுகொண்டே இருந்தால் அந்தப் பாதையின் தடைகள் அகன்று, தேவையான புரதங்களோடு தேவையற்றவையும் குவிகின்றன. பட்டினி–உணவு என்ற சுழற்சி இருந்தால்தான் அது சமநிலையில் இருக்கும்.
நிலா நலத்தில் இது எங்கே
- அந்த mTOR சுழற்சியே இந்நூலின் முப்பது நாள் திட்டத்திற்கான உயிரியல் நியாயம். தொடர்ந்து உண்ணாமல், ஏற்றமும் இறக்கமுமாக இருப்பதே இயற்கை.
- அத்தியாயம் 7 இன் மூச்சுப் பயிற்சிப் பகுதி முழுவதும் அவர் நூலிலிருந்து — ஓம் நமசிவாய மாத்திரைக் கணக்கு, உள்ளிழுப்பைவிட வெளியிடுவது இரண்டு மடங்கு, 55 கோடி மூச்சுக் கணக்கு.
- விரத நாட்களில் மூச்சுப் பயிற்சி பசியைக் குறைக்கிறது என்ற அவரது அனுபவக் குறிப்பே, அமாவாசை உலர் விரத நாளில் (முறை 20) பிராணாயாமத்தை மையமாக வைத்ததற்குக் காரணம்.
- என் புதுக்குறள் 2, 10, 15, 20 — நான்கும் மூச்சைப் பற்றியவை. அவை அனைத்தும் இந்நூலிலிருந்து வந்தவை.
7. டாக்டர் மார்க் ஹைமன் — "The Blood Sugar Solution"
செயல்பாட்டு மருத்துவத்தின் (Functional Medicine) முன்னோடிகளில் ஒருவர். உடல் பருமனும் நீரிழிவும் சேர்ந்த நிலையை "Diabesity" என்று பெயரிட்டு, அது உலகின் மிகப் பெரிய தொற்றா நோய் என்கிறார்.
அவரது மைய வாதம்: நோய் அறிகுறியை அல்ல, முழு அமைப்பையும் சரிசெய்ய வேண்டும். "செடிக்கு அல்ல, மண்ணுக்குச் சிகிச்சை செய்; மண் நலமாக இருந்தால் உரமும் பூச்சிக்கொல்லியும் தேவையில்லை" என்கிறார். இதுவே நம்மாழ்வார் சொன்னதன் மறு உச்சரிப்பு.
சர்க்கரை, மாவுப் பொருட்கள் (ரொட்டி, பாஸ்தா, சாதம், உருளை), பதப்படுத்தப்பட்ட உணவு, டிரான்ஸ் கொழுப்பு, சோள சர்க்கரைப் பாகு (HFCS), பசையம் (gluten), பால் இவையே இன்சுலின் எதிர்ப்பையும் அழற்சியையும் உருவாக்குபவை. HFCS செரிமானமே இல்லாமல் நேரடியாக இரத்தத்தில் கலந்து இன்சுலினை உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. அமெரிக்காவில் கிடைக்கும் மிக குறைந்த வெயிலில் மூன்று மாதத்தில் சோளம் விளைவிக்கப்பட்டு சர்க்கரைப் பாகு (HFCS) தயாரிக்கப்படுகிறது. இப்பொழுது HFCS இல்லாத உணவே இங்கு இல்லை.
"உணவு என்பது தகவல்; அது உங்கள் மரபணுச் செயல்பாட்டையும், ஹார்மோனையும், வளர்சிதை மாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது" என்பது அவரது புகழ்பெற்ற வரி. அதே கலோரி, அதே புரதம், அதே கொழுப்பு இருந்தாலும், இன்சுலினை உயர்த்தும், உடல் எடையைக் கூட்டும்.
அவர் தரும் நடைமுறை அளவுகோல் எளிது: இடுப்பு அளவு ÷ உயரம் × 100 — ஆண்களுக்கு 46–53, பெண்களுக்கு 46–49 இயல்பு. HbA1c 5.1 சிறந்தது; 6.0 க்கு மேல் நீரிழிவு. நீரிழிவு குணப்படுத்தக் கூடியது என்பதே அவரது நம்பிக்கை.
அவரது "UltraWellness" ஏழு படிகள்: ஊட்டத்தை உயர்த்து; ஹார்மோனைச் சமன் செய்; அழற்சியைக் குறை; செரிமானத்தை மேம்படுத்து; நச்சு நீக்கத்தை அதிகப்படுத்து; ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்து; மனத்தை அமைதிப்படுத்து.
நிலா நலத்தில் இது எங்கே
- அத்தியாயம் 7 இன் "தவிர்க்க வேண்டிய நான்கு" மற்றும் உணவு அளவு அட்டவணை இரண்டும் அவருடையவை.
- அத்தியாயம் 5 இன் "எதை அளப்பது" அட்டவணையில் உள்ள இடுப்பு–உயர விகிதமும் HbA1c இலக்கும் அவர் தந்தவை.
- "மாவுச்சத்தை மட்டும் தனியாக ஒருபோதும் உண்ணாதே" என்ற விதி — அத்தியாயம் 6 இல் ஒவ்வொரு சாத நாளிலும் நெய் சேர்ப்பதற்கும், சாதத்திற்கு முன் காய்கறி உண்பதற்கும் இதுவே காரணம்.
- "மற்றவர்களோடு இணைந்திருப்பது நலத்திற்குத் தேவையான ஒரு மூலப்பொருள்" என்ற அவர் வாக்கு அத்தியாயம் 8 இன் "கூட்டு முயற்சி" பகுதியின் அடிப்படை.
- அவரது ஏழு படிகளில் கடைசியானது — மனத்தை அமைதிப்படுத்துதல் — இந்நூலில் வழிபாடாகவும் மௌன விரதமாகவும் இடம்பெறுகிறது. "ஓய்வு என்பது மூச்சு, தூக்கம், உணவு போலவே முக்கியம்" என்கிறார் அவர்.
8. டாக்டர் பி. எம். ஹெக்டே - இந்திய இருதயநோய் நிபுணர், மருத்துவப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்
பெல்லே மொனப்பா ஹெக்டே (பிறப்பு 1938) இந்தியாவின் மூத்த இதய நோய் நிபுணர்; மணிபால் உயர்கல்வி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர். பத்ம பூஷண் (2010), பத்ம விபூஷண் (2021) விருதுகள் பெற்றவர்.
உலகெங்கும் பின்பற்றப்படும் நோயறிதல் முறையையே அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். "நீங்கள் உண்பது உங்களைக் கொல்வதில்லை; உங்களை உண்ணும் எண்ணங்களே கொல்கின்றன" என்பது அவரது மிகப் புகழ்பெற்ற வாக்கியம். உடலின் சூழல் மனம்தான் என்பதால், அன்பு, கருணை, சமூகத் துணை, வேலையில் நிறைவு இவையே உண்மையான மருந்துகள். எதிர்மறை உணர்வுகள் உடனடியாக இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் மூச்சு வேகத்தையும் உயர்த்துகின்றன.
"What Doctors Don't Get to Study in Medical School" என்ற அவரது நூல், நவீன மருத்துவம் அறிவியல், தொழில்நுட்பம், நுகர்வுவாதம் ஆகியவற்றால் உந்தப்படுவதையும், சிகிச்சைச் செலவு நோயாளிக்கு அல்ல மருத்துவருக்கே சாதகமாக அமைவதையும் சுட்டிக்காட்டுகிறது.
அறிகுறியை மட்டும் அளந்து மருந்து தருவதை அவர் கடுமையாக எதிர்க்கிறார். கொலஸ்ட்ரால் எண், இரத்த அழுத்த எண், சர்க்கரை எண் ஆகியவற்றைத் துரத்துவதை விட, மனிதனை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்கிறார். நோயற்று வாழ விரும்புபவர் மருத்துவரிடம் ஓடுவதை விட, தன் எண்ணத்தையும் உணவையும் உறக்கத்தையும் சரிசெய்ய வேண்டும் என்பது அவர் அறிவுரை.
நிலா நலத்தில் இது எங்கே
- அத்தியாயம் 5 இன் "எதை அளப்பது" அட்டவணையில் மனநிலையும் ஒரு அளவுகோலாக இருப்பதற்குக் காரணம் அவர்தான். எடையும் சர்க்கரையும் மட்டும் அளந்தால் போதாது.
- அமாவாசை நாளில் உலர் விரதத்தோடு மௌன விரதமும் சேர்ந்திருப்பது — உடலுக்கு மட்டுமல்ல, மனத்திற்கும் ஓய்வு தேவை என்ற அவரது கருத்தின் நடைமுறை வடிவம்.
- என் புதுக்குறள் 19 — "மனதிலுள்ள பிணியை நீக்கினால் நம் உடலிலுள்ள நோய் குறையும்" முற்றிலும் அவர் கருத்தின் சுருக்கம்.
- அத்தியாயம் 8 இல் மீள்பார்வை என்பது தன்னைக் குற்றம் சாட்டிக்கொள்வது அல்ல என்று வலியுறுத்துவதற்கும் இதுவே காரணம். குற்ற உணர்வு ஓர் அழற்சி.
9. திரு. ஸ்காட் எம். ஜான்சன் — சுழற்சி முறை பயிற்சியாளர் (Agile Coach), Midlands Technical College, தென் கரோலினா, அமெரிக்கா
இந்நூலின் "சுழற்சி முறை" என்ற முதுகெலும்பு, மென்பொருள் உலகின் Agile முறையிலிருந்து வந்தது. அந்த முறையை எனக்குக் கற்பித்தவர் ஸ்காட் எம். ஜான்சன், தென் கரோலினாவின் Midlands Technical College இல் Agile பயிற்சியாளராக இருப்பவர்.
Agile முறையின் மையக் கருத்து எளியது: பெரிய இலக்கை ஒரே முயற்சியில் அடைய முயலாதே. அதைச் சிறு சுழற்சிகளாக (sprint) உடைத்து, ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரு சிறு பயனை வெளியிட்டு, முடிவில் நின்று திரும்பிப் பார்த்து (retrospective), கற்றதை அடுத்த சுழற்சியில் பயன்படுத்து.
2015 இல் என் அலுவலகத்தில் ஒரு திட்டத்தை இந்த முறையில் செய்தோம். அதற்கு முன் மூன்று பெரிய நிறுவனங்கள் இருபத்தைந்து ஆண்டுகளாக முயன்று முடியாததை நாங்கள் எளிதாக முடித்தோம். அப்போதுதான் ஒரு கேள்வி தோன்றியது: கடின வேலையை இது எளிதாக்குகிறதே, உடலில் ஏன் வேலை செய்யாது?
இந்த முறையின் நான்கு பாடங்கள் இந்நூல் முழுவதும் பரவியிருக்கின்றன. ஒன்று — திட்டத்தை மாற்றத் தயங்காதே; உடல் தரும் தகவலுக்கு ஏற்ப மாற்று. இரண்டு — முழுமையை விடத் தொடர்ச்சி முக்கியம். மூன்று — ஒவ்வொரு சுழற்சி முடிவிலும் என்ன வேலை செய்தது, என்ன செய்யவில்லை என்று எழுதி வை. நான்கு — தனியாகச் செய்யாதே; குடும்பமும் நண்பர்களுமே உன் குழு.
அவர் அடிக்கடி சொல்வது ஒன்று உண்டு: Agile இன் நோக்கம் தோல்வியைத் தவிர்ப்பது அல்ல; தோல்வியின் விலையைக் குறைப்பது.
நிலா நலத்தில் இது எங்கே
- அத்தியாயம் 8 முழுவதும் அவருடையது — சுழற்சி, பணிப்பட்டியல், திட்டமிடல், தினசரி நிலைப்பார்வை, முடிந்ததற்கான வரையறை, வேகம், மீள்பார்வை, தடை.
- முப்பது நாள் என்ற அளவே ஒரு sprint இன் நீளம்தான். மென்பொருள் உலகில் வழக்கமாக இரண்டு முதல் நான்கு வாரம்.
- அத்தியாயம் 5 இல் "தவறினால் என்ன செய்வது" என்ற பகுதி — தோல்வியின் விலையைக் குறைக்கும் சிந்தனையின் நேரடி விளைவு.
- அத்தியாயம் 6 இல் ஒவ்வொரு முறைக்கும் "ஏன் வேலை செய்கிறது" என்ற வரி இருப்பதற்குக் காரணம் — காரணம் தெரிந்தவரால் மட்டுமே திட்டத்தைச் சரியாக மாற்ற முடியும் என்பது Agile இன் கொள்கை.
10. திருமதி கிருத்திகா தரன் — Hepta Senz / Hepta Academy, பெங்களூரு
ஊட்டச்சத்து உளவியல் ஆலோசகர் (Nutritional Psychology Counsellor) மற்றும் Zenlp பயிற்சியாளர். பெங்களூருவில் Hepta Senz மற்றும் Hepta Academy நிறுவனங்களை நிறுவியவர். பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், நிறுவனப் பயிற்சி மற்றும் ஆலோசனைத் துறையில் நீண்ட பணியும் கொண்டவர்.
அவரது அணுகுமுறையின் மையக் கருத்து ஒரு வாக்கியத்தில் அடங்கும்: "உடற்பயிற்சிக் கூடத்தின் பாதி சமையலறைக்குள் காத்திருக்கிறது." எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும், சமையலறையில் நடப்பது சரியில்லாவிட்டால் பலன் இல்லை.
உணவைக் கட்டுப்படுத்துவது வெறும் கலோரிக் கணக்கு அல்ல, அது ஓர் உளவியல் பிரச்சினை என்பதே Hepta வின் தனித்துவம். ஏன் உண்கிறோம், எப்போது உண்கிறோம், எந்த உணர்வு நம்மை உண்ணத் தூண்டுகிறது — சலிப்பா, தனிமையா, மன அழுத்தமா — இவற்றை அடையாளம் காண்பதே முதல் படி.
Hepta Happy 100, RMBR (365 நாள் உணவுத் திட்டம்), NEMURU தூக்கத் திட்டம், "Stress to Strength", இளம்பருவ உணவுத் திட்டம், திருமணத்திற்கு முன்/பின் திட்டம், முதுமைத் திட்டம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் தனித் திட்டங்கள் உள்ளன. கட்டுப்பாடான உணவு முறையை விட, வாழ்க்கை முறை மாற்றமே நிலையானது என்பது அவர் கொள்கை.
நிலா நலத்தில் இது எங்கே
- "ஏன் உண்கிறோம்" என்ற கேள்வியே அத்தியாயம் 1 இன் "கவனம்" பகுதியின் மையம். நிலவைப் பார்த்துக்கொண்டே உண்ட குழந்தை இழந்தது அந்தக் கேள்வியைத்தான்.
- அத்தியாயம் 5 இன் "வாழ்நாளின் நான்கு பருவங்கள்" — வயதுக்கேற்ப திட்டம் மாற வேண்டும் என்ற கருத்து Hepta வின் வாழ்க்கைக் கட்டத் திட்டங்களிலிருந்து.
- அத்தியாயம் 8 இல் "சமையலறையை நிர்வகிப்பவரைப் பகைத்துக்கொண்டு எந்த உணவுத் திட்டமும் வெற்றி பெற்றதில்லை" என்ற வரி அவரது கருத்தின் எதிரொலி.
- என் புதுக்குறள் 13 — "உன்னை நீயே ஏமாற்றிக்கொண்டு" — உணவு ஓர் உளவியல் பிரச்சினை என்ற அவரது பார்வையிலிருந்து.
11. டாக்டர் எம். ரமேஷ் ரங்கராஜன் — ஸ்ரீ சாய் யோகாலயா, புனே
1984 இல் தமிழ்நாட்டில் பிறந்தவர். விளையாட்டு வீரராக இருந்து 2002 இல் தன் பத்தொன்பதாவது வயதில் யோகாவிற்குத் திரும்பியவர். முதல் குரு யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி; உலக சமுதாய சேவா சங்கத்தில் பயின்றவர்.
சென்னை Indian School of Yoga வில் யோக சிகிச்சை டிப்ளோமா (2008), டாக்டர் ஆசன ஆண்டியப்பன் கல்லூரியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் முதுகலை (2012), ஸ்டுட்கார்ட் International Peace University இல் பாரம்பரிய யோகாவில் முனைவர் பட்டம் (2020) பெற்றவர்.
புனேவின் ராமாமணி ஐயங்கார் நினைவு யோகா நிலையத்தில், பி. கே. எஸ். ஐயங்கார் அவர்களின் குடும்பத்தினரான கீதாஜி எஸ். ஐயங்கார் மற்றும் பிரசாந்த் எஸ். ஐயங்கார் ஆகியோரிடம் எட்டு ஆண்டுகள் சிகிச்சை யோகாவில் ஆழமான பயிற்சி பெற்றவர். குண்டலினி யோகா, கைவல்யதாமா, ஆர்ட் ஆஃப் லிவிங் என்று பல மரபுகளையும் கற்றவர்.
2017 இல் புனேவில் ஸ்ரீ சாய் யோகாலயாவைத் தொடங்கினார். "யோகா, வர்மக் கலை, இயற்கை மருத்துவம் ஆகியவற்றின் மதிப்பைப் பரப்புவது; யோகா மற்றும் வர்ம இயற்கை மருத்துவத்தின் மூலம் மருந்தில்லாத சமூகத்தை உருவாக்குவது" என்பதே அந்நிறுவனத்தின் நோக்கம். கருவிகளையும் தாங்கிகளையும் (props) பயன்படுத்தி எல்லா வகை நோய்களுக்கும் யோக சிகிச்சை அளிப்பதில் நிபுணர்.
நிலா நலத்தில் இது எங்கே
- "மருந்தில்லாத சமூகம்" என்ற அவரது இலக்கே இந்நூலின் அடிப்படை நம்பிக்கை — நோயை மருந்தால் அடக்குவதை விட, வாழ்வு முறையால் தடுப்பது.
- அத்தியாயம் 7 இல் சூரிய நமஸ்காரத்தை அடிப்படையாக வைத்ததற்குக் காரணம் அவர் — ஒரே பயிற்சியில் எல்லாத் தசைகளும், எல்லா உள்ளுறுப்புகளும், நிணநீர் ஓட்டமும் அடங்குகின்றன.
12. திரு. ஆண்ட்ரியாஸ் மோரிட்ஸ் — "Timeless Secrets of Health and Rejuvenation"
ஆயுர்வேதத்தையும் நவீன உடலியலையும் இணைத்து எழுதப்பட்ட நூல் இது. இந்நூலின் "ஒரு நாள் திட்டம்" மற்றும் "ஒரு மாதம் திட்டம்" ஆகிய இரு அத்தியாயங்களுக்கும் இதுவே முக்கிய ஆதாரம்.
இருபத்திநான்கு மணி நேரத்தில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களும் தலா நான்கு மணி நேரம், இருமுறை ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை உடலியல் ஆதாரங்களுடன் விளக்குகிறார். காலை ஆறு மணிக்கு சிறுநீரகச் சுரப்பிகள் கார்டிசோலைச் சுரக்கின்றன; நண்பகலில் செரிமான அக்னி உச்சத்தில் இருக்கிறது; இரவு பத்து முதல் இரண்டு வரை கல்லீரல் தன் 500 க்கும் மேற்பட்ட பணிகளைச் செய்கிறது.
நள்ளிரவுக்கு முந்தைய இரு மணி நேரத் தூக்கமே மிக ஆழமானது என்கிறார் — அப்போது உடலின் ஆக்சிஜன் நுகர்வு எட்டு விழுக்காடு குறைகிறது; வளர்ச்சி ஊக்கிகள் அதிகமாகச் சுரக்கின்றன. நள்ளிரவுக்குப் பின் இந்த ஆழ்தூக்கம் ஒருபோதும் கிடைப்பதில்லை.
தாளத்தை மீறினால் என்ன ஆகும் என்பதையும் விரிவாகச் சொல்கிறார். காலை எட்டு மணி வரை தூங்கினால், வாதத்தின் கழிவகற்றும் இயக்கம் திசை மாறி, கழிவு உடலுக்குள்ளேயே திரும்புகிறது. ஒரு ஜெர்மானிய ஆய்வு தாமதமாக எழுவதை மாரடைப்புக்கான ஆபத்துக் காரணியாகக் காட்டுகிறது.
நிலவின் நான்கு நிலைகளையும் உடலோடு இணைத்துப் பார்க்கிறார். அமாவாசை என்பது மூச்சை வெளியே விடுவது போன்றது — அன்று ஒருநாள் விரதம் இருந்தால் உடல் தன்னைச் சுத்தம் செய்துகொள்ளும்; பழக்கங்களை விட்டொழிக்கவும் அதுவே சிறந்த நாள். வளர்பிறையில் தரும் ஊட்டம் மிகுந்த பலனளிக்கும். பௌர்ணமியில் உடல் நீரைத் தேக்கி வைக்கும். தேய்பிறையில் செரிமானம் சிறப்பாக இயங்கும், உடல் விரைவாகக் குணமடையும்.
நீரின்மை பற்றிய அவரது எச்சரிக்கை முக்கியமானது: நீண்ட நாள் நீரின்றி இருந்த உடலுக்குத் திடீரென அதிக நீர் தரக் கூடாது; நாளுக்கு ஒரு டம்ளராகவே கூட்ட வேண்டும்.
நிலா நலத்தில் இது எங்கே
- இந்நூலின் முப்பது நாள் சுழற்சி அவரது நிலவுப் பகுதியிலிருந்தே வடிவமைக்கப்பட்டது. அமாவாசையில் உலர் விரதம், பௌர்ணமியில் கடும் சுத்திகரிப்பு இல்லை, தேய்பிறையில் குறைப்பு, வளர்பிறையில் ஊட்டம் — நான்கும் அவர் சொன்னபடியே.
- அத்தியாயம் 3 முழுவதும் அவருடையது — ஆறு தோஷக் காலங்கள், கழிவு வெளியேறும் விகிதங்கள், தாளத்தை மீறினால் என்ன ஆகும், நீர் அருந்தும் முறை, உணவு உண்ணும் விதிகள், உணவின் வரிசை, தினசரியா.
- அத்தியாயம் 6 இன் முறை 22 இல் "காய்கறியை முதலில், சாதத்தைப் பின்" என்ற வரிசைக்குக் காரணம் அவரது கருத்து — வயிறு உண்ட வரிசையிலேயே உணவை அடுக்காக வைத்திருக்கிறது.
- அத்தியாயம் 6 இன் முறை 27 இல் நீர் அருந்தும் நேரங்களும் (உணவுக்கு அரை மணி முன், இரண்டரை மணி பின்) அவர் தந்தவை.
இவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு துறைகளில் இருந்தவர்கள். ஆனால் அனைவரும் ஒரே திசையைக் காட்டுகிறார்கள் — நோயை விரட்டுவதை விட, நலத்திற்கான நிலைமைகளை உருவாக்குவது எளிது. இந்நூல் அதற்கான ஒரு முயற்சி மட்டுமே.