இந்திய குடும்பங்களில் அம்மாக்கள் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும்போது வானத்தில் உள்ள நிலவைக் காட்டுவது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் வழக்கம். "அதோ பார், நிலா மாமா வந்துட்டார்", "நிலா நமக்குச் சோறு ஊட்டப் பார்க்குது" என்று சொல்லி, நிலவின் அழகோடு ஒரு கதையையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.
குழந்தை நிலவின் வசீகரத்திலும் கதையின் ஓட்டத்திலும் ஈர்க்கப்பட்டு, தான் சாப்பிடுவதை அறியாமலேயே வாயைத் திறக்கும். ஒரு கவளம், இரண்டு கவளம் என்று தட்டு காலியாகும். தாய்க்கு நிம்மதி; குழந்தைக்கு வயிறு நிறைகிறது.
இதற்குப் பெயர் "நிலாச் சோறு". இது வெறும் உணவு ஊட்டும் உத்தி மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டுக் கடத்தல். வானம், நிலா, நட்சத்திரம், கதை, பாட்டு, தாயின் குரல் இவை அனைத்தும் சேர்ந்து குழந்தையின் முதல் உலகத்தை உருவாக்குகின்றன. அதில் உண்மையான சில நன்மைகளும் உண்டு:
தாய்–சேய் பிணைப்பு: ஊட்டும் நேரம் வெறும் உணவு நேரமாக இல்லாமல், அன்பு பரிமாறும் நேரமாக மாறுகிறது.
கற்பனைத் திறன்: நிலா, முயல், மாமா, வானம் என்று குழந்தையின் கற்பனை விரிகிறது.
மொழி வளர்ச்சி: கதை கேட்கும் குழந்தையின் சொல் வளம் இயல்பாகப் பெருகுகிறது.
இயற்கையோடு உறவு: வானத்தையும் நிலவின் மாற்றத்தையும் கவனிக்கும் பழக்கம் சிறு வயதிலேயே தொடங்குகிறது.
அழுகை அடம் இல்லாத உணவு நேரம்: வற்புறுத்தல் இல்லாமல், சண்டை இல்லாமல் குழந்தை உண்கிறது.
இவை சிறியவை அல்ல. ஆனால் இவற்றோடு சேர்ந்து, கவனிக்கப்படாமல் ஒரு பழக்கமும் வளர்கிறது.
நிலவைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் குழந்தையின் கவனம் உணவின் மேல் இல்லை. அங்குதான் சிக்கல் தொடங்குகிறது.
சுவை தொலைந்து போகிறது.சாப்பிடுவது நாக்கால் மட்டும் அல்ல; மனதாலும்தான். கவனம் வேறு இடத்தில் இருக்கும்போது, உணவின் சுவையை மூளை பதிவு செய்வதில்லை. என்ன சாப்பிட்டோம், அது எப்படி இருந்தது என்று குழந்தைக்குத் தெரியாமல் போகிறது.
அளவு தெரியாமல் போகிறது."போதும்" என்று சொல்வது வயிறு அல்ல, மூளை. உணவின் மேல் கவனம் இல்லாதபோது, வயிறு நிறைந்த செய்தி மூளையை எட்டுவதற்குள் மேலும் சில கவளங்கள் உள்ளே போய்விடுகின்றன. அளவுக்கு மீறி உண்ணும் பழக்கம் இப்படித்தான் தொடங்குகிறது.
பசியின் மொழி மறக்கப்படுகிறது."எனக்குப் பசிக்கிறது", "எனக்குப் போதும்", இந்த இரண்டு உணர்வுகளையும் அடையாளம் காணக் கற்றுக்கொள்வதுதான் ஒரு குழந்தையின் முதல் ஊட்டச்சத்துப் பாடம். வெளிப்புறக் கவனச்சிதறல் அந்தப் பாடத்தை மூடிவிடுகிறது.
கவனச்சிதறலே நிபந்தனையாகிறது."கதை இருந்தால்தான் சாப்பிடுவேன்", "நிலா தெரிந்தால்தான் வாய் திறப்பேன்" என்ற நிலை வருகிறது. உணவுக்கும் பொழுதுபோக்குக்கும் இடையே ஒரு முடிச்சு விழுகிறது. குழந்தை வளரும். நிலா மறையும். ஆனால் அந்தப் பழக்கம் மறைவதில்லை. அது உருமாறுகிறது.
நிலாவின் இடத்தை தொலைக்காட்சி பிடிக்கிறது. அதன் இடத்தை கைபேசி பிடிக்கிறது. பிறகு சமூக ஊடகங்கள், வீடியோக்கள், விளையாட்டுகள்.
இப்போது உணவு என்பது ஒரு தனி அனுபவம் அல்ல; அது திரைக்குப் பின்னால் நடக்கும் ஒரு பின்னணி வேலை. இதன் விளைவுகள் மெதுவாக வெளிப்படுகின்றன:
உணவில் திருப்தி இல்லை; அரை மணி நேரத்தில் மீண்டும் "ஏதாவது வேண்டும்" என்ற உணர்வு.
பசி இல்லாமலேயே சாப்பிடும் பழக்கம். சலிப்பு, மன அழுத்தம், தனிமை ஆகியவற்றுக்கு உணவே பதிலாகிறது.
பொரித்த தின்பண்டங்கள், இனிப்பு, குளிர்பானங்கள் போன்ற எளிதில் கிடைக்கும், அதிக சுவையுள்ள உணவுகளின் மேல் சார்பு.
இரவு நேரத்தில் தாமதமாகவும், கவனமில்லாமலும் உண்ணும் முறை.
இது ஒரு நாளில் நிகழ்வதில்லை. இது இருபது வருடங்களில் அமைதியாகக் கட்டப்படும் ஒரு கட்டிடம். வளர்ந்த பிறகு எடை, செரிமானம், தூக்கம், சோர்வு என்று பல வடிவங்களில் அது கணக்கு கேட்கிறது.
கவனிக்க வேண்டியது: குற்றம் தாய் மீதோ பாரம்பரியத்தின் மீதோ அல்ல. அவர்கள் அன்போடு, அப்போது தெரிந்த சிறந்த வழியில் செய்தார்கள். நாம் செய்ய வேண்டியது குற்றம் சாட்டுவது அல்ல. அந்த முறையை மேம்படுத்துவது.
நிலவின் நிலைகளும் நாமும்
நிலா ஒரே நாளில் முழு நிலவாகிவிடுவதில்லை.
அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை, மீண்டும் அமாவாசை வரை. சுமார் இருபத்தொன்பதரை நாள். ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய மாற்றம். ஒரு நாளின் மாற்றத்தை வெறும் கண்ணால் அளக்க முடியாது. ஆனால் ஒரு மாதத்தின் மாற்றத்தை யாராலும் மறுக்க முடியாது.
உடல் நலமும் அப்படித்தான்.
ஒரு நாள் சரியாகச் சாப்பிட்டதால் உடல் மாறிவிடாது. ஒரு நாள் தவறியதால் எல்லாம் அழிந்துவிடாது. மாற்றம் என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு சுழற்சி.
இந்த நூலில் அறிமுகமாகும் உணவுமுறை முப்பது நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நிலையும் ஒரு சிறிய பழக்கம். ஒவ்வொன்றும் முந்தையதன் மேல் கட்டப்படுகிறது. பௌர்ணமியில் இருந்து தொடங்கி அமாவாசையில் தொடர்ந்து மீண்டும் பௌர்ணமி வரை மெல்ல மெல்ல முழுமையை நோக்கி ஒரு சுழற்சியாக.
நிலவின் நான்கு நிலைகளும் உடலும்
நிலவின் சுழற்சியை நான்கு நிலைகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு நிலையிலும் உடல் வேறு விதமாகச் செயல்படுகிறது என்பதை ஆயுர்வேதமும், நம் பாட்டி வைத்தியமும், ஆண்ட்ரியாஸ் மோரிட்ஸ் போன்ற நவீன மருத்துவர்களும் ஒருமித்துச் சொல்கிறார்கள்.
| நிலை | உடலின் இயல்பு | நிலா நலத்தில் இடம் |
|---|---|---|
அமாவாசை | மூச்சை வெளியே விடுவது போன்ற நிலை. கழிவை வெளியேற்றத் தயாராக இருக்கும் நாள். | உலர் விரதம், மௌனம். சுழற்சியின் மையம். |
வளர்பிறை | உடல் சேர்த்து வைக்கும் பருவம். தரும் ஊட்டம் கூடுதல் பலன் தரும். | மெல்ல உணவுக்குத் திரும்புதல். சாறு, பின் காய், பின் சாதம். |
பௌர்ணமி | ஆற்றல் உச்சம். உடல் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொள்ளும். | அரைத் தட்டு உணவு. கடும் சுத்திகரிப்பு கூடாது. |
தேய்பிறை | குணமாகும் திறனும் செரிமானமும் சிறப்பாக இயங்கும். | படிப்படியாகக் குறைத்தல். சாறுகளும் மூலிகை நீர்களும். |
இந்த நான்கு நிலைகளையும் ஒரு வட்டமாக இணைத்ததுதான் இந்நூலின் திட்டம். பௌர்ணமியில் நிறைவோடு தொடங்கி, மெல்ல மெல்லக் குறைத்து, அமாவாசையில் முழு ஓய்வு கொடுத்து, மீண்டும் மெல்ல ஊட்டி, அடுத்த பௌர்ணமியை அடைவது.
ஏன் நிலா?
இரண்டு காரணங்கள். ஒன்று நடைமுறை; மற்றொன்று மனநிலை சார்ந்தது.
நடைமுறைக் காரணம்: நிலவுக்கு ஒரு நாட்காட்டி தேவையில்லை. வானத்தைப் பார்த்தால் இன்று சுழற்சியின் எந்த நாள் என்று தெரிந்துவிடும். செயலி வேண்டாம், நினைவூட்டல் வேண்டாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயிகளும் மீனவர்களும் இதையே செய்திருக்கிறார்கள்.
மனநிலைக் காரணம் இதைவிட முக்கியம். எடை குறைக்கும் திட்டங்கள் பெரும்பாலும் ஒரு நேர்கோட்டில் சிந்திக்கின்றன — இன்றிலிருந்து இலக்கு வரை ஒரே திசையில். அந்தக் கோட்டில் ஒரு நாள் தவறினால், "தோற்றுவிட்டேன்" என்ற உணர்வு வருகிறது. வட்டத்தில் தோல்வி என்பது கிடையாது. வட்டத்தில் எல்லாப் புள்ளிகளும் திரும்பி வருகின்றன.
அதனால்தான் இந்நூலின் அலகு "நாள்" அல்ல, "சுழற்சி". ஒரு நாள் தவறியது ஒரு பொருட்டே அல்ல. ஒரு சுழற்சி முழுவதும் தவறியிருந்தால்கூட, அடுத்த பௌர்ணமி முப்பது நாளில் வந்துவிடும்.
மூன்று சொற்கள்: கவனம், தாளம், சுழற்சி
இந்நூல் முழுவதும் இந்த மூன்று சொற்களைச் சுற்றியே அமைந்திருக்கிறது. மற்றதெல்லாம் விவரங்கள்.
கவனம் (Awareness). என்ன உண்கிறேன், எவ்வளவு உண்கிறேன், ஏன் உண்கிறேன் — இந்த மூன்று கேள்விகள். மூன்றாவதுதான் மிகக் கடினமானது. பசியால் உண்கிறோமா, சலிப்பால் உண்கிறோமா, மன அழுத்தத்தால் உண்கிறோமா, பழக்கத்தால் உண்கிறோமா? நிலவைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்ட குழந்தை இழந்தது இந்தக் கவனத்தைத்தான்.
தாளம் (Rhythm). உடலுக்கு ஒரு நாள் தாளம் உண்டு. காலையில் ஒரு நிலை, நண்பகலில் வேறு, இரவில் வேறு. அதே உணவு, அதே அளவு, வேறு நேரம், விளைவு வேறு. மூன்றாம் அத்தியாயம் இதைப் பற்றியது.
சுழற்சி (Cycle). ஒரே நாளில் சரியாகிவிட வேண்டியதில்லை. ஒரு சுழற்சி, பின் இன்னொரு சுழற்சி. ஒவ்வொன்றும் முந்தையதிலிருந்து கற்றுக்கொள்கிறது. எட்டாம் அத்தியாயம் இதைப் பற்றியது.
இது என்ன இல்லை
தவறான எதிர்பார்ப்போடு தொடங்குவதைவிட, எதிர்பார்ப்பைச் சரிசெய்துகொண்டு தொடங்குவது நல்லது.
- இது ஒரு விரைவு எடைக் குறைப்பு முறை அல்ல. ஒரு சுழற்சியில் சுமார் ஏழு கிலோ குறையலாம்; அதில் பாதி நீர். நிலைத்த மாற்றத்திற்குப் பல சுழற்சிகள் தேவை.
- இது பட்டினி அல்ல. முப்பது நாளில் ஒரே ஒரு நாள்தான் முழு விரதம். மற்ற நாட்களில் உணவு உண்டு — வெறும் வடிவம் வேறு.
- இது மருத்துவத்திற்கு மாற்று அல்ல. நீரிழிவுக்கோ இரத்த அழுத்தத்திற்கோ மருந்து எடுப்பவர் அதை நிறுத்தக் கூடாது. மருத்துவரிடம் பேசியே இதைத் தொடங்க வேண்டும்.
- இது ஒரு மதச் சடங்கு அல்ல. அமாவாசையும் பௌர்ணமியும் இங்கே நாட்காட்டியாக மட்டுமே பயன்படுகின்றன.
- இது எல்லாருக்கும் ஒரே மாதிரி வேலை செய்யாது. உங்கள் உடல் உங்களுடையது; அதன் பதிலைக் கவனித்து முறையை மாற்றிக்கொள்ள வேண்டியது உங்கள் வேலை.
இந்நூலைப் படிக்கும் முறை
இது ஒரு கதை நூல் அல்ல; ஒரு கையேடு. முதல் முறை முழுவதும் படியுங்கள். பிறகு தேவையான அத்தியாயத்திற்குத் திரும்புங்கள்.
| அத்தியாயம் | என்ன இருக்கிறது |
|---|---|
| 1 | ஏன் இந்த முறை; அடிப்படைக் கருத்துகள். |
| 2 | நம் உடல் — ஹார்மோன்களும் உடலின் கடிகாரமும். இந்நூலின் ஒவ்வொரு விதிக்கும் பின்னால் உள்ள உயிரியல். |
| 3 | ஒரு நாளின் தாளம் — எப்போது உண்பது, எப்போது தூங்குவது. |
| 4 | முப்பது நாள் சுழற்சியின் முழுத் திட்டம். நாள் வாரியான அட்டவணை. |
| 5 | சுழற்சி முடிந்த பிறகு என்ன; வாழ்நாள் முழுவதும் தொடர்வது எப்படி. |
| 6 | இருபத்தேழு முறைகளின் விரிவான செய்முறைகள். மிகவும் பயன்படும் அத்தியாயம். |
| 7 | உணவு அல்லாத வாழ்வு முறைகள் — யோகா, எண்ணெய்க் குளியல், மூச்சு, மண், நீர், ஒளி. |
| 8 | சுழற்சி முறையின் பின்னணி — Agile சிந்தனை உடல்நலத்திற்கு. |
| 9 | புதுக்குறள்கள் — இந்நூலின் சாரம் இரண்டு வரிகளில். |
| 10 | இதைக் கற்றுத் தந்தவர்கள். |
| 11 | அனுபவங்கள். |
அவசரமாக இருந்தால்: அத்தியாயம் 4 இன் அட்டவணையையும், அத்தியாயம் 6 இன் முறை 27 (தினசரி வழக்கம்) ஐயும் மட்டும் படியுங்கள். அந்த இரண்டே ஒரு தொடக்கத்திற்குப் போதும்.